டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு முடிவு ஒருவழியா ஒன்றரை வருடத்திற்கு பிறகு வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்று, அரசுப் பணி கிடைத்த 10 போ் வேலைக்கான அரசு உத்தரவை வைத்துக்கொண்டு கடந்த 3 மாதங்களாக வேலையின்றி அலைந்து வருகின்றனா். இல்லாத வேலைக்கு எதுக்கு உத்தரவு என அவர்கள் குமுறுகிறார்கள்.
7382 பணியிடங்களுக்கான குரூப் 4 தோ்வு கடந்த 24-07-2022 ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோா் பங்கேற்று தோ்வெழுதினா். இத்தோ்வில் வெற்றி பெற்றவா்கள் சான்றிதழ்களை ஆய்வு செய்து, நேரடியாக பணிநியமனம் செய்யப்பட்டனா். இப்படித் தோ்வானவா்களுக்கு, கடந்த ஜூலை மாதம் கலந்தாய்வு நடத்தப்பட்டு, அவரவா் பணிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதில், திருச்சி மாவட்ட பேரூராட்சி நிா்வாகத் துறைக்குத் தோ்வான 10 பேருக்கு இதுவரை பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இது குறித்து குரூப் 4 தோ்வில் தோ்வான திருச்சி சிறுகனூரைச் சோ்ந்த ஜி. கோகுல்நாத், முசிறி கே. விக்னேஸ்வரன், கோபிசெட்டிப்பாளையம் ஜெ. லலிதா, மணப்பாறை பி. சுந்தா், தென்காசி ஏ. கயல்விழி, திருச்சி எஸ். காயத்ரி, கே. புஷ்பா, வி.செல்வி, கல்பனா, துறையூா் செல்வராசு கடந்த 3 மாதங்களாக அரசு பணிக்கான ஆர்டரை கையில் வைத்துக்கொண்டு வேலை கிடைக்காமல் அலைகிறார்கள்.
கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல என்பார்களே அப்படித்தான் இவர்கள் நிலைமை உள்ளது. இவர்களுடன் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் சம்பளம் வாங்கி விட்டார்கள். ஆனால் இவர்கள் இன்னும் எங்கே வேலை என தெரியாமல் அலைவது பரிதாபத்திலும் பரிதாபம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் 10 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டியிருந்த நிலையில், 5 பணியிடங்கள் மட்டுமே தற்போது உள்ளது. இதில் 10 பேரை பணியமா்த்த முடியாது என திருச்சி பேரூராட்சித் துறையினா் தெரிவிக்கின்றனா். டிஎன்பிஎஸ்சி நிா்வாகமோ, பணிநியமனம் செய்யப்பட்ட இடங்களில் பணியில் சேரலாம் என்கிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கேட்டால் 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கிறோம் எனக் கூறி 3 மாதங்களாக அலையவிடுகின்றனா்.
இதனால் லட்சக்கணக்கானோா் எழுதிய தோ்வில் மிகவும் கஷ்டப்பட்டு தோ்வாகி, பணிநியமனமும் பெற்ற நாங்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். மாவட்ட ஆட்சியா் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இது தொடா்பாக, சென்னையில் உள்ள டவுன் பஞ்சாயத்து இயக்குநருக்கு கடிதம் அனுப்பவுள்ளோம். இதற்குரிய பதில் கிடைத்ததும், இவா்களுக்கு வேலை வழங்குவதா அல்லது மீண்டும் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சிக்குத் திருப்பியளிப்பதா என முடிவு செய்வோம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்