சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு பகுதியில் 350 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. பிற்பகலில் சென்னையில் தரைக்காற்று சற்று பலமாக வீசும் என்றும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணி வரை மிதமான மழையே பெய்யக்கூடும் என்று கணித்துள்ளனர்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இன்று (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக பதிவாளர் அல்லி தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 7 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் , தனியார் வானிலைஆய்வாளர் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடக்கலாம் என்றாலும்கூட அதன் காற்றுக் குவிப்பு மேல் நோக்கி நகர்ந்ததால் சென்னைக்கு இன்று (புதன்) அதி கனமழை பெய்ய வாய்ப்பில்லை. இருப்பினும், இயல்பான அளவில் வடகிழக்கு பருவமழை பெய்யலாம்.
காற்றுக் குவிப்பு ஆந்திராவின் தெற்கு பகுதி நோக்கி நகர்ந்துள்ளது. அதனால் மழை மேக ஈர்ப்பால் நிகழும் மழை மட்டுமே சென்னையில் 18 முதல் 20 ம் தேதி வரை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் 2 நாட்களாக கனமழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் இந்த மழை மேலும் நீடிக்கும் என ஒட்டு மொத்த சென்னை மக்களும் நம்பினர். அனைவரும் ஒருவாரத்திற்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி சேமித்தனர். ஆனால் இன்று காலை யாரும் எதிர்பாராத வகையில் மழை நின்று போனது. சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் தேங்கி நின்ற தண்ணீர் வடிந்து விட்டதால் சென்னை நகரம் இயல்பான வாழ்க்கைக்கு வந்து விட்டது. மழை வரும் என எதிர்பார்த்து விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மழை பெய்யவில்லை. அதே நேரத்தில் வெயிலும் தென்படவில்லை. பெரும்பாலான இடங்கில் போக்குவரத்து தொடங்கியது. ஓஎம்ஆர் சாலையில் வழக்கமான பரபரப்பு காணப்பட்டது.
சென்னைக்கு கிழக்கு 360 கி.மீ. தொலையில் காற்றழுத்த தாழ்வு நிலை இருப்பதால் நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை தூறிக்கொண்டே இருக்கிறது.
வரும் நாட்களில் பொய மழை வந்தால் டிரோன்கள் மூலம் உணவு சப்ளை செய்வது குறித்து இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
துணை முதல்வர் உதயநிதி இன்று மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தார். அவரிடம் மழை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கேட்டுள்ளாரே என பத்திரிகையாளாகள் கேட்டதற்கு, சென்னை நகரில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லையே இதுழவே ஒரு வெள்ளை அறிக்கை தான் என பதில் அளித்தார்.