திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ளது கமலா நிகேதன் பள்ளி ப்ரி கேஜி முதல் பிளஸ்2 வரை வகுப்புகள் உள்ளது. சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். தமிழக பள்ளிகளில் தற்போது அரையாண்டு தேர்வுகள் நடந்து வருகிறது. இன்றுடன் தேர்வு முடியும் நிலையில் நாளை (24ம்தேதி)முதல் ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா என்பதால் திருச்சி மாவட்டத்தில் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே 3ம் தேதி தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் என அனைத்து கல்வி நிலையங்களும் அறிவித்துள்ளன.
ஆனால் கமலா நிகேதன் பள்ளி மட்டும் அரையாண்டு விடுமுறை அளிக்கவில்லை. ப்ரி கேஜி முதல் 3ம் வகுப்பு வரை மட்டுமே விடுமுறை .4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவித்து உள்ளது. அதாவது 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு 30ம் தேதி வரை தொடர்ந்து வகுப்புகள் நடக்கும் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளதால் மாணவ, மாணவிகள் மட்டுமல்ல, பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரையாண்டு விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என திட்டமிட்டிருந்த நிலையில் இந்த பள்ளி நிர்வாகம் திடீரென விடுமுறை இல்லை என அறிவித்தது தங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளதாகவும் சிபிஎஸ்சி வகுப்புகள் நடப்பதால் மாநில நிர்வாகம் அளிக்கும் விடுமுறையை நாங்கள் அளிக்க வேண்டியதில்லை என்றும் பள்ளி நிர்வாகம் கருதி தன்னிச்சையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பெற்றோர்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவதை பள்ளி நிர்வாகம் ஏன் உணர மறுக்கிறது என தெரியவில்லை என்று பெற்றோர்கள் ஆதங்கத்தை கொட்டுகிறார்கள்.