எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதி கேட்டால் மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. ஒரு ஆபத்து காலத்தில் கூட மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உதவுவதில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்தியாவில் இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
தென் நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவானால் தான் தென் மாநிலங்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்ற நிலைக்கு தென் இந்தியர்கள் வந்து விட்டனர். அல்லது ஒரு முறை வட நாட்டவர் பிரதமர் ஆனால் அடுத்த முறை தென்னாட்டவருக்கு பிரதமர் பதவி கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட வேண்டும் என 5 மாநில மக்கள் இன்று கோரிக்கை வைக்கிறார்கள்.
சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு நிவாரணம் கேட்டு தமிழக அரசு பல முறை மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. தமிழ முதல்வர் மு.க. ஸ்டாலின் டில்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். எம்.பிக்கள் உள்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தனர். அவர் ஜனவரி இறுதிக்குள் நிதி தரப்படும் என்றார்.
ஆனால் இன்றுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு சிறப்பு நிதியாக தமிழகத்திற்கு தரவில்லை. இதனால் தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்த நிலை தமிழகத்திற்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் ஆளும் தென் மாநிலங்கள் அனைத்துக்குமே ஏற்பட்டு உள்ளது. இதனை கண்டித்து தான் தென் மாநிலங்கள் டில்லியில் போர்க்கொடி தூக்கி உள்ளன. நேற்று கர்நாடக முதல்வர் டில்லியில் போராட்டம் நடத்தினார். இன்று கேரள முதல்வர் பினராய் விஜயன் போராட்டம் நடத்தினார். தமிழக எம்.பிக்களும் கருப்பு சட்டை அணிந்து போராடினர். தமிழகத்தில் திமுகவினரும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அல்வா கொடுத்து விட்டார்கள் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரிஜினல் அல்வா கொடுத்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் மத்திய அரச தாராளமாக நிதி வழங்குகிறாது. உதாரணமாக தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கப்படும் 1 ரூபாயில் தமிழ் நாட்டுக்கு 26 காசுகளும், கர்நாடகத்துக்கு 16 காசுகளும், தெலங்கானாவுக்கு 40 காசுகளும், கேரளாவுக்கு 62 காசுகளும் மத்திய அரசால் திருப்பி தரப்படுகிறது.
அதே நேரத்தில் பாஜக ஆளும் உபிக்கு ரூபாய்க்கு 2ரூபாய் 2 காசு திருப்பி வழங்கப்படுகிறது. மத்திய பிரதேசத்திற்கு 1 ரூாய் 70 காசும், ராஜஸ்தானுக்கு 1 ரூபாய் 14 காசும் திருப்பி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு போன்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில மக்களிடம் வரி வசூலித்து பாஜக ஆளும் மாநிலத்தில் தாராளமாக நிதியை செலவிடுகிறது மத்திய அரசு.
அதாவது ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்பார்கள். இது அதை விட கொடூரமாக ஒரு கண்ணில் வெண்ணெய் , இன்னொரு கண்ணில் அமிலம் என தடவுகிறது மத்திய அரசு என தென் மாநில மக்கள் கொந்தளிக்கிறார்கள். இதை கண்டித்து தான் எதிர்க்கட்சிகள் டில்லியில் போர்க்கோலம் பூண்டுள்ளன.