நீர்வளத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் துரை முருகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது .காவிரி பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி கர்நாடகாவுடன் பேசி பாருங்கள் என்கிறார். கர்நாடகாவுடன் பேசினால் அனைத்தும் கெட்டுப்போய் விடும், பேசி பார்த்துவிட்டோம் என்று அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
அமைச்சர்: நீங்கள் முதலமைச்சராக இருக்கும் போது அண்டை மாநில முதலமைச்சர்கள் விரோதியாக இருந்தார்களா?. எத்தனையோ ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. அவற்றால் பயனில்லை என்றுதான் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம்.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள் என உச்ச நீதிமன்றம் கூறிவிடும். வி.பி.சிங் ஆட்சிக்காலத்தின் போது, பேசிப்பாருங்கள் என கலைஞரிடம் அவர் தெரிவித்தார். இனி பேச முடியாது என கலைஞர் கூறியதால்தான், காவிரி தீர்ப்பாயம் நமக்கு கிடைத்தது.
மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கையை அவர்கள் தயார் செய்தனர். அதனை காவிரி ஆணையத்திலும் விவாதத்திற்கு முன்வைத்தனர். ஆனால், காவிரி ஆணையத்திற்கு மேகதாது குறித்துப் பேச உரிமை இல்லை என்று நாம் கூறியதால்தான், அந்த விவாதம் கைவிடப்பட்ட திட்ட அறிக்கை திரும்ப அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரியில் எந்த அணையும் கட்ட முடியாது. திமுக கொண்டு வந்ததாலேயே தாமிரபரணி – கருமேனியாறு திட்டத்தை அதிமுக அரசு நிறுத்தியது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அதைத்தொடர்ந்து நீர்வளத்துறை சார்பில் அமைச்சர் துரைமுருகன் ஒரு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
திருச்சி, வேலூர் உள்பட 15 மாவட்டங்களில் தடுப்பணைகள் ரூ-374.95 கோடியில் கட்டப்படும், இதன் மூலம் நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
9 இடங்களில் ரூ.184 கோடியில் அணைகள் கட்டப்படும்.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.338கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருக்கோவிலூர் அணை சீரமைக்கப்படும்.
ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரூ.13.28 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் இருந்து கனிம வளங்கள் கொள்ளை போகாமல் தடுக்க அனைத்து சோதனைச்சாடிகளும் கண்காணிக்கப்படும் என்பது உள்பட 18 அறிவிப்புகளை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.