சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டத்தில் விரைவில் பொதுச்செயலாளர் தேர்வு நடத்துவது பற்றியும், கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டம் முடிந்ததும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. எனவே மக்கள் பணியில் தொய்வில்லாமல்இருக்க ஆலோசித்தோம். அம்மா ஆட்சியின் சாதனை குறித்து பட்டிதொட்டி எல்லாம் பிரசாரம் செய்வது குறித்தும் மக்களை சந்திப்பது குறித்தும் விவாதித்தோம். பொதுச்செயலாளர் தேர்வு குறித்து விவாதிக்கவில்லை.
எடப்பாடி அவர்களின் உருவப்படம் எரித்ததை ஏற்கமுடியாது. இதற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்து விட்டோம். அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவுடன் எங்களுக்கு எந்த மோதலும் இல்லை. அவர்கள் சொன்ன கருத்துக்கு பதில் கருத்து சொன்னோம். அவ்வளவுதான். பாஜக-அதிமுக கூட்டணி தொடருது.
ஜெயலலிதா போல யாரும் பிறக்க முடியாது. ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. பாஜக குறித்து நாங்கள் எந்த சர்ச்சை கருத்தும் சொல்லவில்லை. எனவே அதுபற்றி நாங்கள் விவாதிக்கவும் இல்லை.
ஓபன்னீர்செல்வம் எந்த கட்சியிலும் இல்லை. அவர் நடத்துவது கட்சி அல்ல. கடை. அங்கிருந்து யார் வந்தாலும் தாய் உள்ளத்தோடு ஏற்றுக்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.