திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி தலைவராக இருப்பவர் பாத்திமா பஷீரா. திமுகவை சேர்ந்தவர். இந்த நகராட்சியில் தலைவரையும் சேர்த்து மொத்தம் 24 உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில் திமுக 18, காங். 1, இந்திய கம்யூ 2, அதிமுக 3 உறுப்பினர்கள் உள்ளனர்.
திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை இருந்த போதிலும், நகராட்சி தலைவருக்கு எதிராக ஒட்டுமொத்த திமுக கவுன்சிலர்களும் திரண்டு உள்ளனர். 18திமுக கவுன்சிலர்களில் 15பேர் நகராட்சி தலைவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.
நகராட்சி தலைவர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறோம் என நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்து உள்ளனர். அதன் பேரில் வரும் 19ம் தேதி காலை 10.30 மணிக்கு நகராட்சி கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டால், பாத்திமா பஷீரா பதவி இழக்கும் நிலை ஏற்படும்.
அவருக்கு பதில் புதிய தலைவரை தேர்வு செய்யவும், கவுன்சிலர்கள் முடிவு செய்து உள்ளனர். இது குறித்து மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் மூலம் திமுக தலைமைக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். எனவே 19ம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது உறுதியாகி விட்டது.
திமுக தலைவர் மீது, திமுக கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது:
அரசியலுக்கு புதுமுகமான பாத்திமா மக்களுக்கு நல்லது செய்வார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் இங்கு தனி ராஜாங்கம் செய்யத் தொடங்கி விட்டார். இது குறித்து நாங்கள் மேலிடத்திற்கு பல முறை புகார் தெரிவித்தும் அவர் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.
எங்க புகார் கொடுத்தாலும் என்ன ஒன்னும் செய்ய முடியாது, எனக்கு மேலிடத்தில ஆள் இருக்கு, என் மகன் யாருன்னு தெரியுமா, என்ன வந்தாலும் அவன் பார்த்துக்குவான், என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார். அத்துடன் ஓய்வு பெற்ற ஒரு டிஜிபியின் பெயரை கூறி அவர் எனக்கு சொந்தக்காரர், என்று போலீஸ் நிலைய வழக்குகளில் தலையிட்டு பஞ்சாயத்து செய்கிறார்.
இது தொடர்பாக மாவட்ட செயலாளரிடம் புகார் தெரிவித்தோம். அவர் கூறியும், பாத்திமா கேட்பதில்லை. கட்சி முன்னோடிகளையும் மதிப்பதில்லை.
கவுன்சிலர்கள், தங்கள் வார்டு பிரச்னைகளை கொண்டு சென்றால் அதை கேட்பதுமில்லை, செய்வதுமில்லை. இவர் இப்படியே தொடர்ந்தால் கட்சிக்கு தான் கெட்ட பெயர் வரும். எனவே அவரை நீக்கி விட்டு வேறு தலைவரை தேர்வு செய்ய இருக்கிறோம்’ என்றனர்.