Skip to content
Home » மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்…. விவாதத்திற்கு ஏற்பு

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்…. விவாதத்திற்கு ஏற்பு

  • by Authour

பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டுவர முடிவு செய்தன. அதன்படி காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.பி. நம நாகேஸ்வர ராவ் ஆகியோர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான நோட்டீஸை இன்று காலை வழங்கினர். இன்று காலை மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் 12 மணிக்கு அவை கூடியதும்,  நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அனைத்துக் கட்சி தலைவர்களிடம் ஆலோசித்து விவாதத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார்.

முன்னதாக, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை திட்டமிட்டபடி நடத்த முடியாத அளவுக்கு மணிப்பூர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறை தொடர்பாகவும், 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் குறித்தும், பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வலியுறுத்தி வருகிறது.

மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க தயார் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, உள்துறை மந்திரி அமித் ஷா மூலம் பதில் அளிக்கும் என்று கூறுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்கவில்லை. பிரதமர்தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் கடந்த 20, 21, 24, 25-ந்தேதிகளில் 4 நாட்கள் நாடாளுமன்றம் முடங்கும் நிலை ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் சுமூக நிலை ஏற்படுத்துவதற்காக சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்துழைப்பு அளிக்கக் கோரி எதிர்க்கட்சி தலைவர் கார்கே உள்பட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கடிதம் அனுப்பினார்.

மணிப்பூரில் வன்முறை ஏன் ஏற்பட்டுள்ளது என்பதற்கான விளக்கத்தையும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அமித் ஷாவின் கோரிக்கையையும் எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துவிட்டன. இதற்கிடையே பிரதமர் மோடியை மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்க செய்யும் வகையில் எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் தலைவர் கார்கே ஆலோசனை நடத்தினார். அப்போது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் சட்ட விதிகளின்படி பிரதமர் விளக்கம் அளித்தே தீர வேண்டும் என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து நேற்று காலை மற்ற கட்சித் தலைவர்களுடன் கார்கே விவாதித்தார். இதன் தொடர்ச்சியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்தெந்த வகையில் நெருக்கடி கொடுக்க முடியும் என்பது பற்றியும் எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று மதியம் வரை நீண்ட நேரம் ஆய்வு செய்தனர். பல்வேறு வழிமுறைகளை ஆலோசித்த பிறகு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்கான முடிவை எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருமனதாக மேற்கொண்டனர்.

இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆவணங்கள் தயாரிக்கும் பணியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மேற்கொண்டனர். பாராளுமன்றத்தில் எந்த ஒரு எம்.பி.யும் 198-வது பிரிவின் கீழ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடியும். ஆனால் அந்த தீர்மானத்துக்கு குறைந்த பட்சம் 50 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்து போட்டிருக்க வேண்டும். மேலும் மக்களவை தொடங்குவதற்கு முன்பு காலை 10 மணிக்குள் அந்த தீர்மானத்தை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும். அதை சபாநாயகர் ஆய்வு செய்வார். அதில் கையெழுத்து போட்டுள்ள 50 எம்.பி.க்கள் பற்றி கணக்கிடுவார். அதன் பிறகுதான் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு தேதியை அறிவிப்பார்.

இந்த நடைமுறைகளை எடுத்து வைப்பதற்காக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் ஆவணத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு சோனியா தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். இதையடுத்து பாராளுமன்ற காங்கிரஸ் துணை தலைவரும், அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகாய் மக்களவை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் மக்களவை செயலாளரிடம் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கடிதங்களை ஒப்படைத்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *