Skip to content

நம்பிக்கையில்லா தீர்மானம்…..மக்களவையில் 8ம் தேதி விவாதம்

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தெய் இன மக்களுக்கும் குகி இன மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. மே 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் கொடூரம் நிகழ்த்தப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. மணிப்பூர் சம்பவம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மணிப்பூர் விவகாரம் தற்போது நடந்து வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்து வருகிறது. மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க கோரி இன்று 9-வது நாளாக பாராளுமன்றம் முடக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க பாராளுமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

இதுதொடர்பாக அவர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்ட 10 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் விவாதித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்பது விதியாகும்.

அதன்படி பாராளுமன்றத்தில் வருகிற 8-ந்தேதி முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ளது. அனைத்து கட்சி எம்.பி.க்களும் இதுதொடர்பாக பேச வாய்ப்பு வழங்கப்படும். இதன்காரணமாக மறுநாள் 9-ந்தேதியும் விவாதம் நீடிக்கும். 10-ந்தேதியும் விவாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது. அன்று பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தனது விளக்கத்தை அளிப்பார். அவர் பேசி முடித்த பிறகு ஓட்டெடுப்பு நடத்தப்படும். சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!