திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர் மேல சிந்தாமணி பஜார் பகுதியில் ‘ஏலியன்’ என்ற பெயரில் டாட்டூ மையம் நடத்தி வந்தார். இந்த தொழிலில் தனித்துவமாக கலக்க வேண்டும் என்பதற்காக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஹரிஹரன் மும்பை சென்று. தனது கண்களுக்குள் பச்சை குத்திக் கொண்டும் அறுவை சிகிச்சை மூலம் நாக்கை இரண்டாக பிளந்து அதிலும் டாட்டூ வரைந்து கொண்டு திரும்பினார்.
நாக்கு அறுவை சிகிச்சை செய்வது குறித்து மும்பையில் ஒரு டாட்டூ மையத்தில் பயிற்சியும் பெற்று வந்துள்ளார்.
திருச்சி திரும்பியதும் ஹரிஹரன் தனது நண்பரான திருவெறும்பூர் கூத்தைப்பார் வடக்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் (24) என்பவருக்கு கடந்த டிசம்பர் 9ம் தேதி தேதி ஹரிஹரன் அறுவை சிகிச்சை மூலம் நாக்கை இரண்டாக பிளந்துள்ளார். இதை வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டார்.
இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் காமினி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் ஜெயராமன் ஆகியோரை கைது திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து பிணையில் நேற்று வெளியே வந்தார் ஹரிஹரன்.
அப்போது ஹரிஹரன் கூறியதாவது: ‘‘ நான் ஒரு ‘டாட்டூ’ ஆர்ட்டிஸ்ட். ‘பாடி மாடிபிகேஷன்’ செய்ததற்காக என் மீது வழக்கு பதியப்பட்டது. அதுவரை பாடிமாடிபிகேசன், உரிய பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்பது தெரியாது. என்னைப்போல வெறும் பயிற்சியை மட்டும் வைத்துக்கொண்டு செய்வது சட்ட விரோதம் என்பது எனக்கு தெரியாது. அப்போதைய திருச்சி எஸ்பி வருண்குமார் ஆலோசனையின்படி எனக்கு மனோதத்துவ மருத்துவர்களைக் கொண்டு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. முறையான படிப்பு இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. பாடி மாடிபிகேசன் செய்வதால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது குறித்து தற்போது புரிந்துகொண்டேன். எனவே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடமாட்டேன் .
இவ்வாறு அவர் கூறினார்.