மாணவர்களின் தோள் பையின் எடை அதிகரிப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள் பட்டை வலி மற்றும் முதுகு எலும்பு வளைத உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் உண்டாகின்றன. தவறான தோள் பையை பயன்படுத்துவது மற்றும் தோள் பையை தவறான முறையில் தொடர்ந்து பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் இளம் வயதிலேயே முதுகு கூன் விழுதல், சுவாச கோளாறு, முதுகு தண்டுவட சவ்வு விலகுதல் போன்ற பிரச்சனைகள் வரும் அபாயம் உள்ளது என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
பள்ளிக் குழந்தைகளின் புத்தக பை சுமையை குறைக்க தெலுங்கானா மாநில அரசு இந்த கல்வியாண்டில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. தெலுங்கானாவில் மாணவர்களின் சுமையை குறைக்க வாரத்தில் ஒரு நாள் ‘நோ பேக் டே’ புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாதாந்திர ‘நோ பேக் டே’ திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாதமும் 4-வது சனிக்கிழமையன்று இந்த ‘நோ பேக் டே’ கடைபிடிக்கப்படும்.
அந்த நாட்களில் புத்தக பை கொண்டு செல்ல வேண்டாம். ஆண்டு முழுவதும் மொத்தம் 10 பேக் இல்லாத நாட்கள் கடைபிடிக்கப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்கள் புத்தக பையை சிரமத்தோடு சுமந்து வருவது தடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநில கல்வி காலண்டர் வெளியிடப்பட்டது. அதில் ஜூன் 12, 2023 முதல் ஏப்ரல் 23, 2024 வரையிலான கல்வியாண்டில் ‘நோ பேக் டே’ நாளாக அறிவித்த தேதிகளை கோடிட்டு காட்டியுள்ளது. இந்த ‘நோ பேக் டே’ நாளில் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி, யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடைபெறும். இதுகுறித்து அந்த மாநில கல்விச் செயலாளர் கூறியதாவது:- இந்த ‘நோ பேக் டே’ நாளில் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை தவிர மற்ற செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்த ‘நோ பேக் டே’ நாள் கடைபிடிக்கப்படுவதால் யோகா, விளையாட்டு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும். இதன்மூலம் மாணவர்கள் கற்றல் திறன் மற்றும் பொது அறிவு வளரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.