அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டம் எடப்பாடியில் நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜக கூட்டணியை அதிமுக முறித்து விட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி விட்டோம். இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை. தொண்டர்களின் கருத்துகேட்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்தித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று வி.பி. துரைசாமி கூறியது அவரது சொந்த கருத்து. தமிழ்நாடு பாஜக தலைவரை மாற்ற வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக பிரதமரோ, அமித்ஷாவோ எந்த அழுத்தமும் தரவில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டோம். தொகுதி பங்கீடு குறித்து எந்த அழுத்தமும் தரவில்லை. தொகுதிகள் பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டு வெளியேறவில்லை. இங்கே நடந்த நிகழ்வுகள் தொண்டர்களின் மனதை காயப்படுத்தி விட்டது.
இந்தியா கூட்டணி கூட்டத்தில் காவிரி பிரச்னையை முதல்வர் ஸ்டாலின் முன் வைத்திருந்தால், நமக்கு காவிரி நீர் கிடைத்திருக்கும். மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, அதிமுக எம்.எல்.ஏக்கள் தென்னை விவசாயிகள்ளின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் சந்தித்தனர். திமுகவினர் கூட டில்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.