Skip to content
Home » அதிமுகவுடன் கூட்டணி இல்லை…..தவெக அதிரடி அறிவிப்பு

அதிமுகவுடன் கூட்டணி இல்லை…..தவெக அதிரடி அறிவிப்பு

  • by Senthil

நடிகர் விஜயின் தவெக  கட்சி மாநில மாநாடு கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடந்தபோது, மாநாட்டில் பேசிய  கட்சி தலைவர் விஜய் திமுகவை  தாக்கி பேசினார். ஆனால் அதிமுக குறித்து பேசவில்லை.  அத்துடன் தங்களுடன் கூட்டணியாக வருகிறவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்றும் கூறி இருந்தார்.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்ற நிலையிலும் அதுபற்றி பேசாமல், திமுக ஊழல் கட்சி என விஜய் பேசியதாலும்,  அதிமுகவினர் நடிகர் விஜய் குறித்து எந்த விமர்சனமும் செய்யாததாலும்,   விஜய் அதிமுகவுடன்  கூட்டணி சேர்வார் என பரவலாக  கருத்துகள் பரவியது.

இந்த நிலையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்  இதை மறுத்து உள்ளார். இது தொடர்பாக ஆனந்த் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

“தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கட்சித் தலைவர் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

கட்சித் தலைவரின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கட்சித் தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.

இவ்வாறு அதில் கூறி  உள்ளார். இதன் மூலம் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை இப்போது விஜய் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!