தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) அதிகாரிகள் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வுசெய்து, அவற்றின் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பார்கள். ஆய்வின்போது குறைகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரியிடம் விளக்கம் கேட்கப்படும். குறிப்பிட்ட காலத்தில் குறைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டால், அங்கீகாரம் வழங்கப்படும். அப்படி குறைகள் சரிசெய்யப்படவில்லை என்றால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
அதன்படி, கடந்த மாதம் தமிழகத்தில் என்எம்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்தபோது, பேராசிரியர்கள், மாணவர்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு மற்றும் சிசிடிவி கேமராக்கள் முறையாக இல்லாததும், உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த குறைபாடுகளுக்காக ஏன் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பி, தேசிய மருத்துவஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.மேலும், முதல்கட்டமாக மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த ஆணையம், குறைகளை சரிசெய்ய காலஅவகாசம் வழங்கியது. இதையடுத்து, குறைகளை சரிசெய்து, அங்கீகார ரத்து நடவடிக்கையை தடுப்பதற்கான முயற்சியில் மூன்று மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களும் தீவிரமாக ஈடுபட்டன.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 250, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் 150, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 என மொத்தம் 500 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த விவகாரத்தால், நடப்பாண்டில் இந்த 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 500எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, திருச்சி,ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மிகவும் பழமைவாய்ந்த மருத்துவமனைகளாகும்.
தேசிய மருத்துவ ஆணையம், சிசிடிவி கேமராக்கள் இல்லை என்று சிறிய குறையை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு உடனடியாகத் தீர்வு காணப்படும். அதேபோல, பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களையும் விரைவில் சரிசெய்துவிடுவோம் என்றார்.அதன்படி குறைகள் களையப்பட்டன. இதைத்தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் நாளை என்எம்சி அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். திருச்சியில் 150 மாணவர்களும், ஸ்டான்லியில் 250 பேரும் தர்மபுரியில் 100பேரும் எம்.பி.பி.எஸ் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அந்த 500 இடங்களும் இந்த ஆண்டும் வழக்கம் போல நிரப்புவதில் எந்த பிரச்னையும் இருக்காது.