கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, ஏக்கருக்கு ரூ. 6 லட்சம் வீதம் கொடுத்து ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போதிலிருந்தே நிலங்களை எடுக்க பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து போராட்டங்களையும் முன்னெடுத்தனர். இந்த நிலையில் இன்று சேத்தியாத்தோப்பு அருகே விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 35 ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் நிலங்களை சமன்படுத்தும் பணி தொடங்கியிருக்கிறது.
அதேபோல மேல் வளையமாதேவி பகுதியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி பயிர்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி நிர்வாகம் தொடங்கியிருக்கிறது. வளையமாதேவியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் நெற்பயிர்கள் அறுவடை செய்ய இருக்கும் நிலையில் கால்வாய் வெட்டும் பணியை தொடங்கியுள்ளதற்கும், நெற்பயிர்கள் அழிக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பயிர்களை அழித்து விளைநிலங்களை சமன்படுத்தும் இடத்திற்குள் மக்கள் நுழையாத வண்ணம், மாவட்ட காவல் காண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் சுமார் 400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் சேத்தியாதோப்பு, வலையமாதேவி சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.