மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்னொரு நாயக பேட்டர் உருவான நாள் இன்று என்றால் அது மிகையல்ல. இந்திய அணி இன்று காலை 191/6 என்று இருந்த போது களமிறங்கினார் நிதிஷ் குமார் ரெட்டி, ஆட்டம் முடியும் போது இந்திய அணி 358/9. நிதிஷ் குமார் 105 நாட் அவுட். வாஷிங்டன் சுந்தர் (50) உடன் இணைந்து இருவரும் 127 ரன்களை 8வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது மெல்போர்னில் இந்தியாவின் 3வது பெரிய 8வது விக்கெட் பார்ட்னர்ஷிப் ஆகும். 191/6 என்ற நிலையிலிருந்து பிறகு 221 வரை சென்ற போது ஜடேஜா நேதன் லயனிடம் எல்.பி. ஆக 221/7 என்று இந்திய அணி ஃபாலோ ஆன் அபாயத்தில் இருந்தது, அந்த முதல் தடையை நிதிஷ் குமாரும் வாஷிங்டனும் கடந்தனர். நிதிஷ் குமார் சதம் எடுக்கும் போது சரியாக 99 ரன்களில் இருந்த போது பும்ரா கமின்ஸிடம் ஆட்டமிழக்க 9 விக்கெட்டுகள் விழுந்து விட்டன, கமின்ஸுடைய மீதமுள்ள 3 பந்துகளில் சிராஜ் தாங்குவாரா, நிதிஷ் சதமெடுப்பாரா என்று மைதானமே திக் திக் கணங்களில் மூழ்கியிருந்தது. எப்படியோ கமின்ஸின் ஓவரை சிராஜ் தடுத்தாடி விட, அடுத்து போலண்ட் வீச வந்தார் அவரது பந்தை நேராக தூக்கி அடித்து சதம் கண்டார் நிதிஷ் குமார் ரெட்டி. ஆனால் நிதிஷ் ரெட்டி சதம் அடித்தார். 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்தங்கி உள்ளது. நிதிஷ் குமார் எந்த ஒரு தவறையும் செய்யாமல் ஆடினார். பிட்சில் ஒன்றும் இல்லை என்பதால் எதற்காக தூக்கி எறியவேண்டும் என்று மன உறுதியுடன் விட வேண்டிய பந்துகளை விட்டும், ஆட வேண்டிய பந்துகளை ஆடியும் அனைத்திற்கும் மேலாக ஆஸ்திரேலியாவின் துல்லியத் தாக்குதல் பந்து வீச்சின் சோதனைகளையும் கடந்து அட்டகாசமான டெஸ்ட் சதம் ஒன்றை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இளம் வயதில் சதம் கண்ட 3-வது வீரர் என்ற பெருமையை எட்டினார் நிதிஷ் குமார்.
1. சச்சின் – 18 வயது 256 நாட்கள்
2. ரிஷப் பண்ட் – 21 வயது 92 நாட்கள்
3. நிதிஷ் ரெட்டி – 21 வயது 216 நாட்கள்
4. தத்து பட்கர் – 22 வயது 46 நாட்கள்