பீகார் முதல்வராக இருப்பவர் நிதிஷ்குமார். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அங்கு நடக்கிறது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் பாஜக தயவில் அவர் முதல்வர் பதவியில் தொங்கி கொண்டு இருக்கிறார்.
யார் இந்த நிதிஷ் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இந்தியா கூட்டணி கூட்டத்தை முதன் முதலில் பாட்னாவில் ஏற்பாடு செய்த அதே நிதிஷ்குமார் தான். கடந்த மாதம் அவர் 9வது முறையாக பீகார் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் ஏற்பட்ட மோதலால் கடந்த மாதம் திடீரென பாஜக அணிக்கு தாவிய நிதிஷ்குமார் புதிய அரசை அமைத்துக்கொண்டு முதல்வர் பதவியை மட்டும் விட்டு விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டார்.
243 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் இவரது கட்சிக்கு 45 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். அதே நேரத்தில் லாலுவின் ஆர்ஜேடி கட்சிக்கு 79, பாஜகவுக்கு 78 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 3வது இடத்தில் இருந்தாலும் முதல்வர் பதவியை விடமாட்டேன் என அடம் பிடிக்கும் இந்த நிதிஷ்குமார், ஒரு காலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், பிரதமர் மோடி பீகார் மாநிலத்தில் பிரசாரத்துக்கு வரக்கூடாது என வெளிப்படையாக அறிவித்தவர்.
காலம் எப்படி மாறிப்போச்சு…. இன்று பிரதமர் மோடி தயவில் முதல்வர் பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்.பிரதமரை தேடிப்போய் சந்திக்கிறார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று நிதிஷ் கூறினாலும், நேற்று டில்லியில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களுடன் நடந்த சந்திப்பின் பின்னணியில் பல காரணங்கள் இருக்கிறதாக பீகாரில் பேசப்படுகிறது.
வரும்27ம் தேதி பீகாரில் 6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சி கூடணி தலா 3 இடத்தில் வெற்றி பெறலாம். அதில் தனக்கு ஒண்ணு போட்டு கொடுங்க என கேட்பது முதல் திட்டம். அடுத்ததாக வரும் 12ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறேன். எனது பாணியிலேயே என்னை கவிழ்த்து விடாதீர்கள். உங்கள நம்பித்தான் இருக்கிறேன் என்று கெஞ்சி கேட்டுக்கொள்ளவும் தான் அவர் டில்லி போனதாக பீகார் மக்கள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள்.