மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை சின்ன மேல தெருவை சேர்ந்த எம்.கே.முசாகுதீன் மகன் முகமது பைசல் (32) என்பவரது வீட்டில் இன்று காலை 6.30 மணியில் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் மூன்று அதிகாரிகள் ஈடுபட்டனர். காலை 8.30 மணி வரை சோதனை நடந்தது. பின்னர் சோதனை நடத்திய அதிகாரிகள் அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.
முசாகுதீன் அவரது மகன் முகமது பைசல் இருவரும் மஸ்கட் நாட்டில் டிரைவராக பணியாற்றி வருகிறார்கள். கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என மூன்று மாநிலங்களில் 60 இடங்களில் சோதனை நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் வடகரையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளருடன் அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.
ஐ.எஸ்.ஐ எஸ் தீவிரவாத அமைப்பு தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையை தொடர்ந்து அங்கு உள்ளூர் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.