Skip to content

அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் மீண்டு வருவோம்- டோனி

  • by Authour

 நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு வரை  39 போட்டிகள் நடந்து உள்ளது.  நேற்று கொல்கத்தாவில்  நடந்த போட்டியில்  கொல்கத்தா,  குஜராத் அணிகள் மோதின. இதில் குஜராத் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி  12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பெறும் அணிகளே அடுத்த கட்டமான பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். பிளே ஆப்  செல்ல வேண்டுமானால்,  குறைந்தபட்சம்  16 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.  இன்னும் 2 போட்டிகளில்  வெற்றி பெற்றாலே போதும் என்ற நிலை காணப்படுகிறது.

அதே நேரத்தில் சென்னை அணி  இதுவரை 8 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.  இனி சென்னை அணி 6 போட்டிகளில் ஆட வேண்டி  உள்ளது. அந்த 6 போட்டிகளிலும்  நல்ல ஸ்கோருடன் வென்றால்  பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம்.

ஆனால் அதற்கான வாய்ப்பு  சென்னை அணிக்கு இல்லை. எனவே  சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறும் என்பது தான் தற்போதைய நிலை. இது அந்த அணியின் கேப்டன்  டோனிக்கு தெரிந்து விட்டது.

நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. அதன் பிறகு டோனி  நிருபர்களிடம் கூறியதாவது:

நாங்கள் சராசரிக்கும் குறைவான ஸ்கோரையே எடுத்தோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் 2-வது பாதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதை நாங்களை அனைவரும் அறிவோம். மிடில் ஓவர்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தோம்.

உலக அரங்கில் இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய வீரர்களில் ஒருவராக ஜஸ்பிரீத் பும்ரா உள்ளார். இறுதிக்கட்ட ஓவர்களில் வீசக்கூடிய பந்து வீச்சை மும்பை அணி சற்று முன்னதாக தொடங்கியது. நாங்கள் அதை மூலதனமாக்கி சற்று முன்கூட்டியே ரன்கள் குவிக்க தொடங்கியிருக்க வேண்டும்.

நடு ஓவர்களிலும், இறுதிக்கட்ட ஓவர்களிலும் அவர்களுடைய பீல்டிங் அமைப்பு ஒரே மாதிரியே இருந்தது. ஒரு சில ஓவர்களில் சற்று கூடுதலாக ரன்கள் சேர்த்திருக்கலாம். எங்களுக்கு அந்த ரன்கள் தேவைப்பட்டது, ஏனெனில் பனிப்பொழிவை கருத்தில் கொள்ளும் போது 176 ரன்கள் என்பது சராசரிக்கும் குறைவானதே.

கிரிக்கெட்டின் சரியான வடிவத்தை விளையாடுகிறோமா என்பதை பார்க்க வேண்டும். மேலும் பேட்ஸ்மேன்கள் தங்களை பயன்படுத்திக் கொள்கிறார்களா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவை கேள்விக்குறிகளாக உள்ளன. அதைத் தவிர அணியில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயற்சிக்கிறோம்.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எங்கள் முன்னால் இருக்கக்கூடிய அனைத்து ஆட்டங்களையும் வெல்ல வேண்டும். எனினும் ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துவோம். சில ஆட்டங்களில் நாங்கள் தோல்வி அடைந்தால், அடுத்த ஆண்டுக்கான சரியான அணிச்சேர்க்கையை பெறுவதில் கவனம் செலுத்துவோம்.

அதிக அளவிலான மாற்றங்களை மேற்கொள்ள நாங்கள் விரும்புவது இல்லை. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு முயற்சி செய்வோம். ஆனால் அது நிகழவில்லை என்றால் அடுத்த ஆண்டுக்கான 11 வீரர்களை கண்டறிந்து வலுவாக மீண்டு வருவோம். இவ்வாறு டோனி கூறினார்.

 
 
error: Content is protected !!