33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தொடக்க விழா அணிவகுப்பு பாரிஸ் நகரில் உள்ள சீன் நதியில் புதுமையான முறையில் நடத்தப்பட்டது. படகுகளில் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் அணி வகுத்து உற்சாகமாக வந்தனர். கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகள் நேற்று நிறைவுபெற்றது.
இந்தியாவின் சார்பில் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை மனு பாகர் பெற்றார்.
அதேவேளையில், ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் ஸ்வப்னில் குசாலே வெண்கலத்தை கைப்பற்றி இருந்தார். ஆடவர் ஹாக்கியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. ஆடவருக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.
ஆடவருக்கான மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தி இருந்தார். இதன் மூலம் இந்தியா சார்பில் இந்த ஒலிம்பிக்கில் மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்தன.
போட்டியின் கடைசி நாளான நேற்றைய தினத்திலும் சில போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் முடிவடைந்ததும் நள்ளிரவு 12.30 மணிக்கு (இந்திய நேரப்படி) ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா கோலாகலமாகதொடங்கியது.
பாரிஸில் உள்ள ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிறைவு விழாவை 80 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அமர்ந்து கண்டுகளித்தனர். நிறைவு விழாவையொட்டி வீரர், வீராங்கனைகளின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பு விழாவில் இந்திய அணி சார்பில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகர், வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றனர். இதைத் தொடர்ந்து கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு இசை, நடன நிகழ்ச்சிகளை நடத்தினர்.
நிறைவு விழாவில் 5 முறை கிராமி விருது வென்ற அமெரிக்க பாடகியான கேப்ரியெலா சர்மியெண்டோ வில்சன் என்று அழைக்கப்படும் ஹெச்.இ.ஆர் தேசிய கீதத்தை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். கண்கவர் நிறைவு விழாவில் ஆயிரக்கணக்கான ஆண் பெண் கலைஞர்கள் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தனர். அக்ரோபாட்ஸ், சர்க்கஸ் நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
இதைத் தொடர்ந்துசர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கொடி இறக்கப்பட்டது. அந்த கொடி 2028-ல் அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரென் பாஸ்சிடம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கொடி ஒப்படைக்கப்பட்டது.
விழாவின் கடைசி நிகழச்சியாக, எரிந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.