Skip to content
Home » வரவேற்புக்கு தயாரான மணமக்கள் கொடூர கொலை

வரவேற்புக்கு தயாரான மணமக்கள் கொடூர கொலை

  • by Authour

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரில் வசித்து வந்தவர் அஸ்லம்(24) இவருக்கு கடந்த 19 ந்தேதி தேதி ராஜதலாப் பகுதியைச் சேர்ந்த கக்ஷன் பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் விருந்து ராய்ப்பூர் நகரின் சாஸ்திரி பஜாரில் அமைந்துள்ள சீரத் மைதானத்தில் நடைபெற இருந்தது.

பந்தல் அலங்கரிக்கப்பட்டு விருந்தினர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் மணமகன் அஸ்லமும் மணமகள் கக்ஷனும் தங்கள் அறையில் விருந்து நிகழ்ச்சிக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தனர். அப்போது அறைக்குள் அலறல் சத்தம் கேட்டது.  வீட்டில் இருந்த அஸ்லமின் தாயார் கதவை திறக்க முயன்றார். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் திறக்க முடியவில்லை. இதையடுத்து, மருமகளின் அலறல் சத்தம் கேட்டு, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தாயார் மகன் முகம் குப்புறக் கிடப்பதையும், படுக்கையில் மருமகள் சடலமாக கிடப்பதையும் பார்த்தார்.

அறை முழுவதும் ரத்தக்கறையாக இருந்து உள்ளது.  முதற்கட்ட விசாரணையில் சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். தன்னிடம் இருந்த கத்தி போன்ற ஆயுதத்தால் அஸ்லாம் முதலில் கக்ஷனை தாக்கியிருக்க வேண்டும். மருமகளின் மார்பில் பெரிய காயம் உள்ளது. அவரது கையை துண்டிக்கவும் முயற்சி நடந்துள்ளது. படுக்கையில் ரத்தம் சிதறிக் கிடந்தது. அஸ்லாமின் கழுத்து மற்றும் தொடையில் கத்திக்குத்து காயம் உள்ளது. இருவரது உடல்களும் பரிசோதனைக்காக அம்பேத்கர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அஸ்லாம் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் கக்ஷனின் தந்தை கார் டிரைவர். சீரத் மைதானத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது மணப்பெண் இறந்த செய்தி கிடைத்ததும் விருந்து நடந்த இடம், பந்தல், மேடை ஆகியவையும் சேதப்படுத்தப்பட்டன. அங்கிருந்து சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததால், கலவரம் ஏற்படாத வகையில், கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *