உலகக்கோப்பை 2023 போட்டித்தொடரின் முதல் போட்டி நேற்று பிற்பகல் ஆமதாபாத்தில் தொடங்கியது. நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் சேர்த்தது. 283 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 283 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வென்று கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் விரட்டி பழிதீர்த்துக்கொண்டது.
டேவான் கான்வே 152 ரன்களிலும்(121 பந்துகள், 3 சிக்ஸர், 19பவுண்டரிகள்), ரச்சின் ரவீந்திரா 123 ரன்களிலும்(96பந்துகள், 5சிக்ஸர்,11 பவுண்டரிகள்) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
உலகக் கோப்பைத் தொடரில் 2வது விக்கெட்டுக்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற பெருமையை கான்வே, ரவீந்திரா கூட்டணி பெற்றது. இருவரும் சேர்ந்து 112 ரன்கள் சேர்த்துள்ளனர். கடந்த 1996ம் ஆண்டு லீ ஜெர்மன், கிறிஸ் ஹாரிஸ் ஜோடி சேர்த்த ஸ்கோரைவிட அதிகபட்சமாக கான்வே, ரவீந்திரா ஜோடி சேர்த்தது.
இந்தப் போட்டியில் 10வது விக்கெட்டுக்கு ஆதில் ரஷித் மற்றும் மார்க் வுட் கூட்டணி 30 ரன்கள் சேர்த்ததுதான் 2016ம் ஆண்டுக்குப் பின் அதிகபட்ச ஸ்கோர்.
நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள இடதுகை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ரவீந்திராவின் பெயருக்கு முன்னால் இருக்கும் ரச்சின் என்ற பெயர் சமூக ஊடகத்தில் டிரண்டானது. அதாவது, ராகுல் திராவிட்டின் பெயரில் வரும் “ரா”, சச்சின் டெண்டுல்கரின் “சின்” ஆகிய எழுத்துகளை ஒன்றினைத்து ரச்சின் என்று ரவீந்திரா தன் பெயருக்கு முன்பாக சூட்டியுள்ளார். கிரிக்கெட்டின் மீதான தீராக் காதல், இந்திய ஜாம்பவான்களான சச்சின், திராவிட் ஆகியோர் மீதான அபிமானம் ஆகியவற்றால் இந்தப் பெயரை வைத்துக் கொண்டுள்ளார்.
ரச்சின் ரவீந்திரா கடந்த 1999ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி வெல்லிங்டனில் பிறந்தார். இவரின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி. பெங்களூருவில் மென்பொருள் துறை வல்லுநராக இருந்தவர். கடந்த 1990களில் நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தார்.
ரவி கிருஷ்ணமூர்த்தி தனது இளமைக் காலத்தில் பெங்களூருவில் ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். நியூசிலாந்தில் “ஹட் ஹாக்ஸ்” என்ற கிரிக்கெட் கிளப்பை உருவாக்கியவர் ரவி கிருஷ்ணமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
ரவீந்திராவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, ஐசிசி நடுவராக இருக்கும், முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத்துடன் கிரிக்கெட் விளையாடியவர். ஸ்ரீநாத்தை செல்லமாக “ஸ்ரீமாமா” என்றுதான் ரவீந்திரா அழைப்பார்.
ஆனால், இரண்டாவது போட்டியில் ரவீந்திரா 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நியூசிலாந்து அணிக்காக இதுவரை 6 டி20 போட்டிகளில் ரவீந்திரா விளையாடியுள்ளார். 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை ரவீந்திரா கைப்பற்றியுள்ளார்.
உலகக் கோப்பை தொடரின் உற்சாகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும், ஆமதாபாத் நரேந்திர மோதி அரங்கின் இருக்கைகள் பெரும்பாலும் காலியாக இருந்ததாக சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பதிவிட்டனர்.
வார நாளில் போட்டி வந்ததும், இந்தியா போட்டியில் ஆடாததும், ஒரு நாள் போட்டிக்கான ஆதரவு குறைந்திருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர்.