உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை விமரிசையாக நடந்தது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆரோக்கிய மாதாவை வழிபட்டனர்.
ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வேளாங்கண்ணி சேவியர் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை பரிபாலகர் சகாயராஜ் 2023,ம் ஆண்டிற்கு நன்றி தெரிவித்தும், 2024,ம் ஆண்டை வரவேற்றும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். முன்னதாக ஊர்வலமாக வருகைதந்த பாதிரியார்களுக்கு புத்தாண்டை வரவேற்கும் விதமாக கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததை, குத்துவிளக்கு ஏற்றி மக்களுக்கு அவர் அறிவித்தார். புத்தாண்டில் அமைதியும், நன்மையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் மகிழ்ச்சியையும், சந்தோசத்தினையும் இப்புத்தாண்டு அளிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யப்பட்டது. வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, கோவாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். இன்றும் வேளாங்கண்ணியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.