சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் கீழ் செயல்படும், எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் திருவல்லிக்கேணி கஸ்துாரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனைகள் இணைந்து, www.iogkgh.org.in என்ற இணையதள சேவையை துவக்கி உள்ளன. இந்த இணையதளத்தின் முகவரி மற்றும் எளிதாக இணைய சேவையை பயன்படுத்தும் வகையில், ‘கியூ.ஆர் குறியீடு’ போன்றவை, மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு தெரியும்படி ஒட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையில், பிறப்புக்கு முந்தைய பராமரிப்பு, கர்ப்ப கால உடல், மன ஆரோக்கியம், சுய ஒழுக்கம், உங்கள் டாக்டரை நம்புங்கள், ஆபத்து மிக்க கருத்தரிப்பு, கர்ப்பகால நீரிழிவு, இதயநோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட 15 தலைப்புகளில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில், சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளது.