திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலம் முக்கொம்பு. இங்கு தடுப்பணை கட்டப்பட்டு அகண்டகாவிரி ஆறு, காவிரியாகவும், கொள்ளிடமாகவும் பிரிகிறது. இந்த அணையில் இருந்து சுமார் 1கி.மீ. தொலைவுக்குள் உள்ளது திண்டுக்கரை.
இந்த திண்டுக்கரை கிராமத்தில் உள்ள காவிரியில் ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து மணிகண்டம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு காவிரி குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான பணிகளை தொடங்குவதற்காக நேற்று காலை போல்வெல் எந்திரம் மற்றும் ஊழியர்கள் திண்டுக்கரை வந்தனர். இதை அறிந்த திண்டுக்கரை கிராம மக்கள் இங்கு ஆழ்துளை கிணறு அமைத்தால் எங்களுக்கு நிலத்தடி நீர் பாதிக்கப்படும். இந்த பகுதியில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது.
ஆழ்துளை கிணறு அமைப்பதால் எங்களுக்கு விவசாயம் மட்டுமல்லாமல் குடிநீர் பாதிப்பும் ஏற்படும். அத்துடன் அருகில் உள்ள முக்கொம்பு அணைக்கும் இதனால் பாதிப்பு உண்டாகும். முக்கொம்பு காவிரி அணை கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டது. ஏற்கனவே முக்கொம்பில் கொள்ளிடம் தடுப்பணை உடைந்து புதிய அணை கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறப்பு விழா காணாமல் இருக்கிறது.
இங்கு ஆழ்துளை கிணறு அமைத்தால் அணையும் பாதிக்கும் . எனவே ஆழ்துளை கிணறு இங்கு அமைக்காமல் வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள் என கிராம மக்கள் திண்டுக்கரையில் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு வந்த ஊழியர்களால் பணியை தொடங்க முடியாமல் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். எப்போது பணி தொடங்கினாலும் அதை தடுத்து நிறுத்துவோம் என அந்த பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.