திருச்சி மாநகருக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக அய்யாளம்மன் படித்துறை பகுதியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.270 கோடியில் அமைக்கப்பட்டது. அதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:
திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேற்றி வைக்கப்படுகிறது.10 ஆண்டுகளாக நம்முடைய அரசு இல்லாததால் எந்த பணியும் செய்ய முடியவில்லை. இப்போது நிதி சிக்கல் இருந்தபோதிலும், பல திட்டங்களுகு்கு முதல்வர் அனுமதி கொடுத்துள்ளார். திருச்சி மாநகருக்கு தினமும் 90 லட்சம் லிட்டர் குடிநீர் தான் வினியோகிக்கப்பட்டு வந்தது. அது கலைஞர் காலத்தில் தான் 120 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதற்காக கலைஞர் ரூ.220கோடி நிதி ஒதுக்கினார்.
பெரிய மிளகுபாறையில் எப்போதும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் அங்கு லாரிகளில் தான் குடிநீர் சப்ளை செய்யப்படும். அந்த பிரச்னையை தீர்க்க ரூ.280 கோடி ஒதுக்கி கொள்ளிடத்தில் இருந்து குடிநீர் கொண்டு வந்து குடிநீர் தொட்டி மூலம் வினியோகிக்க திட்டம் தீட்டப்பட்டது. இந்த திட்டம் தொடங்கும்போது காவிரி நீர் கேட்காமல், ஏன் கொள்ளிடம் நீர் கேட்கிறீர்கள்என கலைஞர் கேட்டார். கொள்ளிடம் நீர் தான் சுவையாக இருக்கும் என்பதால் அதை கேட்கிறோம் என்று சொன்னோம்.
இப்போது அந்த திட்டமும் முடிக்கப்பட்டு அதையும் திறந்து வைக்க இருக்கிறோம். அடுத்ததாக உறையூர், ஜி.ஹெச் பகுதிக்கும் குடிநீர் சப்ளை அதிகரித்து வழங்க இருக்கிறோம். இதன் மூலம் இனி திருச்சி மாநகராட்சியில் தினமும் ஒரு நபருக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படும்.
அத்துடன் பழைய குழாய்கள் எல்லாம் மாற்றப்பட்டு புதிய குழாய்கள் அமைக்கப்படும். எடமலைப்பட்டி புதூருக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை, சாலை வசதி பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
திருச்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்க முதல்வர் ரூ.380 கோடி ஒதுக்கி உள்ளார்.அடுத்த கட்டமாக ரூ.450 கோடியில் மார்க்கெட் வளாகம், வணிக வளாகம் கட்டும் பணி நடக்க இருக்கிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு வருமானம் உயரும். சென்னையைப்போல திருச்சிக்கும் முதல்வர் அதிக நிதி ஒதுக்கி வருகிறார்.
மணப்பாறையில் முன்பெல்லாம் 7 தினங்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வரும். இப்போது 2 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை ெசய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி , கொள்ளிடம் கரைகளை பலப்படுத்த ரூ.240 கோடி முதல்வர் ஒதுக்கி உள்ளார். இன்றைக்கு கூட பஞ்சப்பூரில் ரூ.270 கோடியில் 100 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதல்வர் அனுமதி வழங்கி உள்ளார். அங்குள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது.
அதாவது முதல்வர் அறிவித்த ஒலிம்பிக் அகாடமி அமைய உள்ள இடத்தில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது.
.
இவ்வாறு அமைச்சர் நேரு பேசினார். விழாவுக்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், எம்.எல்.ஏக்கள் பழனியாண்டி, சவுந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.