திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்ற, மதுரைக்கிளையைச் சேர்ந்த போர்ட் போலியோ நீதிபதிகளான சுப்ரமணியம், ஸ்ரீமதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்கள், மற்றும் வட்டார அளவிலான நீதிமன்றங்கள் உள்ளிட்டவைகளில் கடந்த சில நாள்களாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.
ஆய்வுக்கு வந்த நீதிபதிகளுக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதுசமயம் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சங்கத்தின் 46 ஆவது ஆண்டு விழா நினைவு கேடயம் வழங்கப்பட்டது. சங்கத்தின் செயலாளர் பி.வி.வெங்கட் கேடயத்தை வழங்கினார்.அப்போது வழக்கறிஞர்களின் குறைகளை நீதிபதிகள் கேட்டறிந்தனர்.அப்போது நீதிமன்றத்தில் புதிய சாலை வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் செயலாளர் பி.வி.வெங்கட் நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தார்.மாவட்ட தலைமை அரசு வழக்கறிஞர் சவரிமுத்து முன்னிலை வகித்தார். அரசு கூடுதல் வழக்கறிஞர் மோகன், ஜாகிர் உசேன்மற்றும் பொறுப்பாளர்கள் சுதர்சன் ,சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.