Skip to content
Home » புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்….வழங்கும் பணி….. ஜூன் மாதம் தொடங்கும்

புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்….வழங்கும் பணி….. ஜூன் மாதம் தொடங்கும்

நாடு முழுவதும் 1966-ம் ஆண்டு உணவு பொருட்கள் உற்பத்தி குறைந்து போய், கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது தமிழகத்தில் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அப்போது முதல்-அமைச்சராக இருந்த பக்தவச்சலம் அந்தாண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி ரேஷன் கடைகளை தொடங்கினார். இந்த கடைகள் மூலம் பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் வழங்க குடும்ப அட்டை வழங்கப்பட்டன.

அதன்பின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி, 1972-ம் ஆண்டு தமிழ்நாடு பொதுவினியோக கழகத்தை தொடங்கினார். பின்னர் 1975-ம் ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் குடும்ப அட்டைகளை வழங்கினார். இந்த குடும்ப அட்டைகள் மூலம் சலுகை விலையில் மக்களுக்கு தேவையான அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. தற்போதைய நிலையில் விலையில்லா அரிசி மற்றும் சர்க்கரை, பருப்புகள், பாமாயில் ஆகியவை கொடுக்கப்படுகின்றன. ஆனால் ரேஷன் கார்டுகள், உணவு பொருள் பெறுவதற்கு மட்டுமின்றி அரசின் பல்வேறு பொருட்கள், சலுகைகள் ஆகியவற்றை பெறுவதற்கும் தற்போது முக்கிய  அடையாள  அட்டையாக உள்ளது.

அதுமட்டுமின்றி வருவாய் துறை வழங்கும் சான்றிதழ்களுக்கு எல்லாம் குடும்ப அட்டைதான் முக்கிய ஆவணம். இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு முதல் ரேஷன் கார்டுகள் அனைத்தும் ‘ஸ்மார்ட் கார்டு’களாக மாற்றி வழங்கப்பட்டன. அதாவது ஆதார் மற்றும் செல்போன் எண் இணைக்கப்பட்டு இந்த ‘ஸ்மார்ட் கார்டுகள்’ வழங்கப்பட்டன. அதன் மூலம் ஒருவரே பல ரேஷன் கார்டுகள் வைத்திருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன. ஸ்மார்ட் கார்டு வழங்கிய பின்பு நாடு முழுவதும் சுமார் 4 கோடி போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 20 லட்சத்திற்கு மேல் இருக்கும். இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் ஆட்சிக்கு வந்தவுடன் புதிய ‘ஸ்மார்ட் கார்டு’கள் வழங்கும் முறையில் பெரும் மாற்றம் கொண்டு வந்தார். விண்ணப்பித்த 30 நாட்களில் புதிய ‘ஸ்மார்ட் கார்டு’கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதே வேளையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஸ்மார்ட் கார்டுகள் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதனால் புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. அதாவது ஒரு குடும்பத்தில் இருக்கும் மாமியார், மருமகள் இருவரும் மகளிர் உரிமைத்தொகை பெற வேண்டும் என்பதற்காக ஒரே வீட்டில் இருந்தாலும் வீட்டு எண்ணை ஏ, பி என சேர்த்து கொண்டு புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். 2021-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சமாக இருந்தது. அதன்பின் 2022- ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10 லட்சம் அதிகரித்து 2 கோடியே 20 லட்சம் ஆனது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் உள்ளன.

இதற்கிடையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்பாட்டுக்கு வரும் வேளையில் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களை பிரித்து கொண்டு புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். அதனால் புதிய கார்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதன்பின் மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி நடந்தது. தற்போது சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்து உளளன.

இவர்களுக்கு பல மாதங்களாக கார்டுகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சிலருக்கு உங்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஒப்புதல் ஆகிவிட்டது என்ற குறுஞ்செய்தி வந்தது. அவர்களுக்கு கார்டுகள் வழங்கும் சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி விட்டது. எனவே அவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் தேர்தலுக்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே தேர்தல் நடைமுறைகள் வருகிற ஜூன் மாதம் 5-ந் தேதி விலக்கி கொள்ளப்பட்ட பின்பு அனைத்து மாவட்டங்களிலும் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் பணிகள் நடைபெறும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் மூலம் விண்ணப்பம் செய்து காத்திருக்கும் 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கும் பலன் கிடைக்கும். அதற்கிடையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு சட்டசபை இடைத்தேர்தல் ஜூன் மாதம் நடப்பதாக இருந்தால் அந்த மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். அதேபோல் ஸ்மார்ட் கார்டு தொலைந்தவர்கள் மற்றும் திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய ஸ்மார்ட் கார்டு தடையின்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *