Skip to content

புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதில் தாமதம் இல்லை… அமைச்சர் சக்கரபாணி விளக்கம்..

  • by Authour

புதிய குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்பட்டு வருவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு,  முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பொறுப்பேற்ற பின்பு இதுவரை 15,94,321 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான பயனாளிகள் குடும்ப அட்டையை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுக்கப்பட்டதால், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை மாறுபடாமல் பராமரிக்கப்பட்டதையொட்டி 06.07.2023 முதல் புதிய குடும்ப அட்டைகள் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பணியும் ஏற்கனவே அச்சடிக்கும் நிலையிலிருந்த குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

ஆனாலும் மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய   மாவட்டங்களில் 17,197 குடும்ப அட்டைகள் டிசம்பர் 2023 மாதத்தில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன.  அதேபோன்று வெள்ளம் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 10,380 குடும்ப அட்டைகள் டிசம்பர் 2023 மாதத்தில்  அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன.

ration card

மார்ச் 2024 மாதத்தில் 45,509 குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன.  இடையில் பாராளுமன்றத் தேர்தல் நடைமுறைகளின் காரணமாக விண்ணப்பங்களைச் சரிபார்த்தல் மற்றும் ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ள இயலாத சூழ்நிலை நிலவியதால் தேர்தல் முடிந்தபின் கள விசாரணை மற்றும் விண்ணப்ப விவரங்கள் சரிபார்க்கும் பணி முடுக்கிவிடப்பட்டன.  நாளதுதேதி வரை பெறப்பட்ட  2,89,591 விண்ணப்பங்களில் 1,63,458 புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்கள் கள விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 92,650 விண்ணப்பங்கள் ஒப்புதலளிக்கப்பட்டுள்ளன.

ஒப்புதல் அளிக்கப்பட்ட 24,657 விண்ணப்பங்களுக்குப் புதிய குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன.  ஒப்புதல் அளிக்கப்பட்ட  இதர விண்ணப்பங்களுக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன.  மீதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் தொடர்ந்து கள விசாரணையும் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியும் விரைந்து நடந்து வருகின்றன.  ஆதலால், சிலர் கூறுவது போல் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்விதத் தாமதமும் இல்லை என்பதையும் விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!