தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் போயனப்பள்ளி சீனிவாச ராவ். இவர் பிரதிமா உள்கட்டமைப்பு குழுமத்தின் தலைவராக உள்ளார். இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் சீனிவாச ராவ் புதிய ஹெலிகாப்டர் ஒன்றை சொந்தமாக வாங்கினார். நாம் சொந்தமாக வாங்கிய கார், பைக், பஸ் உள்ளிட்ட வாகனங்களை கோவிலுக்கு கொண்டு சென்று வாகன பூஜை போடுவது வழக்கம். இதேபோல் சீனிவாச ராவ் தான் புதிதாக வாங்கிய ஹெலிகாப்டருக்கு பூஜை செய்ய ஐதராபாத்தில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள யாதகிரி லட்சுமி நரசிம்மசாமி கோவிலுக்கு ஹெலிகாப்டரை கொண்டு சென்றார். கோவில் வளாகம் முன்பு ஹெலிகாப்டரை நிறுத்தினார். திடீரென ஹெலிகாப்டர் ஒன்று கோவில் வளாகத்தில் நிற்பதை கண்ட பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஹெலிகாப்டரை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதையடுத்து கோவில் பூசாரிகள் வந்து ஹெலிகாப்டருக்கு வாகன பூஜை செய்தனர். புதியதாக வாங்கிய ஹெலிகாப்டருக்கு கோவிலில் வைத்து பூஜை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.