பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை டில்லியில் நடப்பு மத்திய அமைச்சரவையின் கடைசி கூட்டம் நடந்தது. இதில் அமைச்சரவையை ராஜினாமா செய்து விட்டு 18வது மக்களவை பதவியேற்பு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் வருகிற 8ம் தேதி அல்லது 9ம் தேதி பதவியேற்பு விழா நடத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. பெரும்பாலும் 8ம் தேதிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
வழக்கமாக கடந்த 2 முறை பாஜக தனது பதவியேற்பு விழா குறித்து உடனுக்குடன் அறிவித்தது. ஆனால் இப்போது கூட்டணி தயவுடன் ஆட்சி நடத்த வேண்டியது இருப்பதால், கூட்டணி கட்சித்தலைவர்களையும் ஆலோசித்து முடிவுகளை அறிவிக்க வேண்டிய நிலை பாஜகவுக்கு உள்ளது.
அத்துடன் இன்று பிற்பகல் புதிய எம்.பிக்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். அத்துடன் கூட்டணி கட்சித்லைவர்களையும் சந்தித்து பேசுகிறார். அப்போது அவர்களுக்கு என்னென்ன இலாக்காக்கள் ஒதுக்குவது என்பது குறித்து பேசுகிறார்கள். அதைத்தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள பதவியேற்பு விழா குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கிறார்கள்.