தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதைத்தொடர்ந்து புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவர் தமிழகத்தின் 49வது தலைமை செயலாளர் ஆவார். இஅவர் 1989ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர்.
ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட சிவ்தாஸ் மீனா, 1964ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி பிறந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றார். அதன்பின் ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிவ்தாஸ் மீனா ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பானிய மொழிகளை கற்றுள்ளார்.
1989ம் ஆண்டு ஐஏஏஸ் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக சிவ்தாஸ் மீனா பணியில் சேர்ந்தார். காஞ்சிபுரத்தில் உதவி கலெக்டராக பயிற்சியை தொடங்கிய சிவ்தாஸ் மீனா, கோவில்பட்டி உதவி கலெக்டர், வேலூர் கூடுதல் கலெக்டர், நாகை மாவட்ட கலெக்டர் என படிப்படியாக பணி உயர்வு பெற்றார். ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை சிவ்தாஸ் மீனா வகித்துள்ளார். 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்டவர். இவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 4 தனிச் செயலாளர்களில் ஒருவராக இருந்தவர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும், தமிழ்நாடு கேடரில் இருக்கும் அதிகாரிகளில் மிகவும் சீனியர். நெருக்கடியான சூழலில் திறமையாக செயல்படக் கூடியவர் என்ற நற்பெயர் பெற்றிருக்கிறார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த சிவ்தாஸ் மீனாவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர் ஓய்வு பெறுவார்.