உலகக்கோப்பை கிரிக்கெட்டில் லக்னோவில் இன்று நடைபெற்ற 19-வது லீக்கில் நெதர்லாந்து-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் அபார பந்துவீச்சால் நெதர்லாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. விக்ரம்ஜித் சிங் (4), மேக்ஸ் ஓடவுட் (16), அக்கர்மேன்(29), டி லீட்(6), நிதமானுரு (9), கேப்டன் எட்வர்ட்ஸ்(16) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் நெதர்லாந்து அணி 91 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனை தொடர்ந்து சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் வான் பீக் ஆகியோர் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஏங்கல்பிரெக்ட் 70 ரன்களும், வான் பீக் 59 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நெதர்லாந்து அணி 49.4 ஓவர்களில் 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்தது. நிஷாங்கா அரைசதம் அடித்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அசலங்கா 44 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 30 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த சமரவிக்ரமா 91 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இறுதியில் இலங்கை அணி 48.2 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அத்துடன், நடப்பு உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.