Skip to content

பாதித்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும்…. தஞ்சையில் விவசாயிகள் மனு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்துள்ள மத்திய குழுவினர் சித்திரக்குடி பகுதியில் வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்களை பார்வையிட வேண்டும். பாதித்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, வைரப்பெருமாள்பட்டி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, வைரப்பெருமாள் பட்டி, குணமங்கலம், சித்தாயல் உட்பட பகுதிகளில் விவசாயிகள் கோ-51, கோ-50 ரகங்களை சாகுபடி செய்திருந்தனர். இன்னும் இரண்டு வாரங்கள் சென்றால் அறுவடை செய்து விடலாம் என்ற நிலையில் பயிர்கள் வளர்ந்து இருந்தது.

இந்நிலையில் கடந்த மாதத்தில் தஞ்சை மாவட்டத்தில் 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சம்பா பயிர்களில் நெல்பழம் நோய் தாக்குதல் மற்றும் புகையான் தாக்குதல் காணப்பட்டது. காலை மற்றும் இரவு வேளையில் அதிகளவு பனிபெய்ததால் பயிர்கள் பாதிப்பை சந்தித்து வந்தது.

இதற்கிடையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, வைரப்பெருமாள்பட்டி, குணமங்கலம், சித்தாயல் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் ஏக்கருக்கு 10 மூட்டைகள் கூட தேறாத நிலை உள்ளது. பாதிக்கு பாதிக்கூட மகசூல் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு சித்திரக்குடி கனகராஜன், கல்விராயன்பேட்டை ஊராட்சி முன்னாள் தலைவர்கள் வடிவேல், நம்பியார் ஆகியோர் தலைமையில் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே சித்திரக்குடி, வைரப்பெருமாள்பட்டி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், குணமங்கலம் பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழையால் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா – தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் தொடர் மழையால் பயிர்கள் கருக்காகவாக மாறிவிட்டது. இதனால் 80 சதவீதம் நெல் பயிர்கள் வீணாகி விட்டது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்த்து.

பின்னர் விவசாயிகள் கூறியதாவது: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களின் ஈரப்பதம் உயர்த்துவது தொடர்பாக இன்று (நேற்று) டெல்டா மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு செய்கிறது. ஆனால் அதனை மட்டும் ஆய்வு செய்யாமல் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குறித்தும் கணக்கீடு செய்ய வேண்டும். அதற்கு வேளாண் துறை அதிகாரிகள் மத்திய குழுவை பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு அழைத்து சென்று காட்ட வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், பயிர் காப்பீடு ரூ. 35 ஆயிரம் முழுமையாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.