அறுவடைத் தொடங்கிய நிலையில் எதிர்பாராத மழையால் அழிந்த சம்பா, தாளடி நெற் பயிர் இழப்பிற்கு முழு காப்பீடுத் திட்ட இழப்பீடு மற்றும் மாநில அரசு நிதி சேர்த்து ஏக்கர் ஒன்றிற்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்.
உளுந்து, பாசிப் பயிறு, நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட தானிய பயிர்களுக்கு பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மழையால் காற்றின் ஈரப்பதம் அதிகரித்த நிலையில் அரசு நெல் கொள்முதலில் 22 சதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாபநாசத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாபநாசம் தாலுக்கா அலுவலகம் முன்பு பாதிப்பிற்குள்ளான நெற் கதிர்களை கையில் ஏந்தியும், நெல்மணிகளை கொட்டியும் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் தர்மராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை ஏஐடியுசி மாவட்டச் செயலர் தில்லைவனம் துவக்கி வைத்தார். இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் செந்தில்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ராமலிங்கம், ராஜேந்திரன், வெங்கடேசன், கல்யாணசுந்தரம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் குமரப்பா, சக்கரவர்த்தி, சேகர், இலங்கேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.