தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக இன்று அவர் விமானம் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து நெல்லை வந்தார். நெல்லையில் அவருக்கு உற்வாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கே.டி.சி. நகர் பகுதியில் முதல்வர் நடந்து சென்று மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் கங்கைகொண்டான் சிப்காட் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.4,400 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்தார்.
விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவையும் திறந்து வைத்தார். இதனையடுத்து நெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகைக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மாலை 5 மணியளவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.40 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை மகாத்மா காந்தி தினசரி சந்தை, காய்கனி சந்தை மற்றும் புதிய வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்.
அங்கு வைத்து காணொளி காட்சி வாயிலாக, நெல்லை டவுன் பாரதியார் பள்ளிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கம், நயினார்குளம் தெற்கு பகுதியில் மேம்படுத்தப்பட்ட பணிகளை திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இதில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைகிறார்கள். இரவில் நெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.