நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 2ம் தேதி வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் எரிக்கப்பட்டு கிடந்தார். உடல் சாம்பலான நிலையில் அவரது உடலை உவரி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஐஜி வரை அனைத்து அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர் எழுதி வைத்திருந்ததாக கூறப்படும் கடிதங்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அவர் கொலை செய்யப்பட்டார் என கூறப்பட்டது. பின்னர் கொலை அல்ல என்றனர்.
கொலை என்றே அந்த பகுதி மக்கள் பேசிக்கொள்கிறார்கள். ஜெயக்குமார் இறந்து 20 நாட்களுக்கு மேலாகியும் இது கொலையா, தற்கொலையா என போலீசார் அறிவிக்காமல் காலம் கடத்தி வருகிறார்கள். அத்துடன் இன்று அந்த வழக்கை போலீசார் சிபிசிஐடிக்கு மாற்றி விட்டனர். எனவே இந்த வழக்கின் நிலையும் திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்குப்போல குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலை தான் ஏற்படும் என மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.