மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு பகுதியில் உள்ள கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம்” என்ற திட்டத்தின்கீழ் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்த பல்வேறு விதமான கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு கலந்துரையாடினார். அப்போது, மாணவி ஒருவர் நெல்லில் உள்ள ஈரப்பதத்தை எளிமையான முறையில் உலர்த்தும் வகையில் நவீன மின்விசிறி பொருத்தப்பட்ட கருவி ஒன்றை தயாரித்து காட்சிப்படுத்தி இருந்தார் . இதனைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாணவியிடம் கலந்துரையாடினார். அப்போது, அவர் அறுவடை செய்யப்படும் நெல்லில் 25 சதவீதம் வரை ஈரப்பதம் இருப்பதால் விவசாயிகள் அதை பொதுவெளியில் உலர வைக்கும் பணியில் ஈடுபடுவதாகவும், இதனால் அவர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் ஈரப்பதத்தை உறிஞ்சி எடுக்கக்கூடிய நவீன மின் விசிறி அடங்கிய இயந்திரத்தின் மாதிரியை தயாரித்து இருப்பதாக ஆட்சியரிடம் மாணவி கூறினார். இதனைக் கேட்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாணவியின் முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.