பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்கு தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால், நடைமுறையில் தினமும் சூரியன் சரியாக தலைக்கு மேலே வருவதில்லை. ஆண்டிற்கு இரண்டுமுறை மட்டுமே ஒரு இடத்தின் தலைக்கு மேலே வரும். ஆக, ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகின்றது. அந்த நாளையே நிழலில்லா நாள் (Zero Shadow Day) என்கிறோம். இது வருடத்திற்கு இரு முறை கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடையே இருக்கும் இடங்களில் நிகழும். நமது இந்தியாவின் மத்திய பகுதியிலிருந்து (குஜராத்) தென் பகுதி இறுதி (கன்னியாகுமரி) வரை இருக்கும் இடங்களில் நிகழக்கூடியது. இன்று 24.08.23 வியாழக்கிழமை புத்தனாம்பட்டியில் நிழல் இல்லாத தினம் ஆகும்.
திருச்சி, புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரி, இயற்பியல் துறை மற்றும் NMC அஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து நிழலில்லா நாள் நிகழ்வு நடத்தியது. கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் திரு.பொன். ரவிச்சந்திரன் கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன், சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார். இயற்பியல் துறை பேராசிரியர்கள் கபிலன், ரமேஷ், ரமேஷ் பாபு, முருகானந்தம், ரக்ஷனி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். இன்று 24.08.23 வியாழக்கிழமை மதியம் 12:18 மணி அளவில் சோதனை மூலம் நிழலில்லா நாள் நிகழ்வு மாணவ மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இதைத் தெரிந்துகொள்வதால் என்ன பயன்?
பல்வேறு பொருட்களின் நிழலின் நீளங்களை உற்றுநோக்குவது என்பது சிறந்த கற்றல் அனுபவமாகவும், மகிழ்வான செயல்பாடாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. எரட்டோஸ்த்தனஸ் என்ற கிரேக்க அறிஞர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிழலில்லா நாளன்றுதான் பூமியின் விட்டத்தை அளந்து கூறினாராம்.