Skip to content

நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்…. மாணவ-மாணவியரின் விடுதி மூடல்…

நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாணவ, மாணவியர் தங்கி இருந்த விடுதி மூடப்பட்டுள்ளது. நெல்லை, புதிய பேருந்து நிலையம் அருகே கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் அகமத் என்பவர் ‘ஜல்’ நீட் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இங்கு நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு மாணவரிடமும் ஆண்டு பயிற்சி கட்டணமாக ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே இந்த அகாடமியில் படிக்கும் மாணவர்களை பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன், பிரம்பாலும், காலணியாலும் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் நேரில் ஆய்வு நடத்தி, தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

அனைத்து துறை அதிகாரிகளும் உரிய விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே ஜலாலுதீன் மீது மேலப்பாளையம் காவல் நிலையத்தில், சிறார் பாதுகாப்பு சட்டம் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் நடைபெற்று வருகிறது. உரிய அனுமதி பெறாமல் விடுதி நடத்தப்பட்டதாக காவல்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில் நீட் அகாடமி விடுதியில் சமூக நலத்துறை மற்றும் வருவாய் துறையினர் சோதனை நடத்தியதை தொடர்ந்து விடுதி மூடப்பட்டுள்ளது.

விடுதியில் இருந்த மாணவ, மாணவிகள் அவசர அவசரமாக காலி செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். நீட் பயிற்சி மையத்தில் தங்கி படித்துவந்த 52 மாணவிகள்,13 -மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விடுதி செயல்படுவதற்கு சமூகநலத் துறையிடம் அனுமதிபெறவில்லை என்பதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!