ராஜஸ்தானின் கோட்டா நகரில் நீட் தேர்வு பயிற்சிக்காக தங்கி, படித்த வெளிமாநில மாணவர்கள் 2 பேர் பயிற்சி மையத்தில் தேர்வை எழுதிய பின்னர் நேற்று அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .அவர்கள் அவிஷ்கர் ஷாம்பாஜி கஸ்லே (18) மற்றும் ஆதர்ஷ் ராஜ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவிஷ்கர் தேர்வு எழுதிய பின்னர் மாலை 3.15 மணியளவில் நீட் பயிற்சி மையத்தின் 6-வது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த அந்த பயிற்சி மையத்தின் ஊழியர்கள் உடனடியாக அவிஷ்கரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு சென்றனர். எனினும், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளன.
இதேபுோல் மராட்டியத்தின் லத்தூர் மாவட்டத்தில் வசித்து வந்த 12-ம் வகுப்பு மாணவரான அவிஷ்கர், 3 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். அவருடைய பெற்றோர் அரசு பள்ளி ஆசிரியர்களாக உள்ளனர். இதேபோன்று சில மணிநேரம் கழித்து, பீகாரை சேர்ந்த ஆதர்ஷ் ராஜ் என்ற மாணவரும் தனது வாடகை குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் சகோதரி மற்றும் உறவினர் ஒருவர் வசித்து வந்தனர். தூக்கு போட்டதும் விவரம் அறிந்து உறவினர்கள், அவரை கீழே இறக்கினர்.
அப்போது உயிருடன் இருந்த அவரை காப்பாற்றி விட சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அந்த முயற்சி பலனின்றி போனது. இந்த 2 மாணவர்களும் தற்கொலை குறிப்பு எதுவும் எழுதி வைக்கவில்லை. இதுகுறித்து கூடுதல் எஸ்.பி. பகவத் சிங் ஹிங்கர் கூறும்போது, நீட் தேர்வு எழுதிய 2 மாணவர்களும் அதற்கு பின்னர் தற்கொலை செய்துள்ளனர். இதுபற்றி விசாரணை செய்து வருகிறோம் என கூறியுள்ளார். அவர்களின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோட்டா நகரில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்கள் பயிற்சிக்காக சேருகின்றனர். எனினும், கடந்த ஆண்டு கோட்டாவில் 15 பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்தனர். நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் கோட்டா நகரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் சில காலம் வரை எந்த தேர்வுகளையும் நடத்த வேண்டாம் என்று அரசு நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.