புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களில் நீட் (NEET) நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணாக்கர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. மாவட்டத்தில் மொத்தம் 3 இடங்களில் பயிற்சி வகுப்பு தொடங்கியது. 30ம்தேதி வரை இலவச பயிற்சி அளிக்கப்படும். புதுக்கோட்டையில் இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் மு.அருணா துவக்கி வைத்து பேசியதாவது:
மாணாக்கர்களின் கல்வி நலன் மீது மிகுந்த அக்கறைகொண்டு தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற பயிற்சி வகுப்புகளை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு சிறப்பான உயர்கல்வியினை பயின்று உயர்ந்த நிலையினை அடைந்திட வேண்டும் , நீட் தேர்வு என்றால் மாணவர்களுக்கு பயம் வரக்கூடாது. எளிதில் வெற்றி பெற முடியும் என்ற மனநிலையுடன் தோ்வை அணுகுங்கள். ஆசிரியர்கள் அளிக்கும் போதனைகளை உள்வாங்கி படித்தால் அனைவரும் வெற்றி பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் .கூ.சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர்கள் .ரமேஷ் (புதுக்கோட்டை), ஜெயந்தி (அறந்தாங்கி), உதவித் திட்ட அலுவலர் சுதந்திரன், மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சாலை செந்தில், புதுக்கோட்டை வட்டாட்சியர் .மு.செந்தில்நாயகி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.