திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி்யிருப்பதாவது:
நீட் தேர்வு என்பது ஏழை-எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட பாசிச பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட தேர்வு. சமூகநீதிக்கு எதிரான தேர்வு முறை – சமத்துவம் இல்லாத தேர்வு முறை – கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்கக்கூடிய தேர்வு முறை – அவர்களது கல்வி உரிமைக்கு தடை போடும் தேர்வு முறை -அவர்களது மருத்துவக் கனவைச் சிதைத்து, “நீ டாக்டர் ஆக முடியாது” என்றும், “உனக்குத் தகுதியில்லை” என்றும் கூறி, தடுப்புச் சுவர் எழுப்புகிறது. மேலும், நீட் தேர்வு என்பதே ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சாதகமாகவும், வசதி படைத்தோருக்கும் மட்டுமே பயனடையும் வகையில் உருவாக்கப்பட்ட தேர்வு முறை. ஆள்மாறாட்டம் செய்வது – வினாத் தாள்களை திருடுவது – விடைத்தாள்களை மாற்றி வைப்பது – மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் என்று இத்தேர்வே முழுமையான மோசடியாக உள்ளது. இதனை முன்பே அறிந்ததால் தான் தி.மு.க. நீட் தேர்வை ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறது
நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. நீட் தேர்வு என்பதே பெரும் மோசடி என்பதைத் தான் கழகத் தலைவர் அவர்கள் வலியுறுத்தி அதனை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
நீட் தேர்வே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதற்காக நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்டமசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டுமென்றும், நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோசடிகளை, குளறுபடிகளை களைவதற்கு மேல்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசை கண்டித்து கழக மாணவர் அணிச் சார்பில் வரும், 24.6.2024 அன்று காலை 9 மணியளவில், சென்னை, வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.