தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை வந்த ஜனாதிபதி முர்முவிடம், இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜனாதிபதியிடம் மனு அளித்தார்.
இந்த நிலையில் திமுக இளைஞர் அணி சார்பில் 50 நாளில் 50 லட்சம் பேரிடம் நீட் தேர்வில் விலக்கு கோரி கையெழுத்து பெற்று ஜனாதிபதியிடம் வழங்க முடிவு செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர், மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கப்படுவதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
பொதுநலன் இருந்தால் வழக்கு தொடரலாம். திமுக கையெழுத்து வாங்குவதால் மனுதாரர் எவ்வாறு பாதிக்கப்பட்டார். நீட் வேண்டாம் என்று சொல்ல அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு. இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் ரூ.1லட்சம் கோர்ட்டில் டெபாசிட் செய்ய தயாரா?
இவ்வாறு நீதிபதிகள் கேட்டதும், மனுதாரர் ரவி , பொதுநல மனுவை வாபஸ் பெறுவதாக கூறினார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.