நாடாளுமன்ற தேர்தல் 2024 ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம். இந்த நிலையில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் புதிய அரசியல் வியூகம் அமைத்து 2 கூட்டங்களையும் வெற்றிகரமாக நடத்தி விட்டனர். முதல் கூட்டத்தை டீ பார்ட்டி, போட்டோ ஷூட் கூட்டம் என கிண்டலடித்த பாஜக நேற்று 2ம் கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனது. அதுவும் பெங்களூரு கூட்டத்தில் இந்தியாவின் பிரபல கட்சிகள் 26 பங்கேற்று, அந்த கூட்டணிக்கு இந்தியா எனவும் பெயர் சூட்டி விட்டது.
இந்தியா என்றாலே நாங்கள் தான் என கூறிக்கொண்டிருந்த பாஜகவுக்கு , எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டி அதற்கான விளக்கத்தையும் அளித்து உள்ளனர். இந்த பெயர் சூட்டப்பட்ட அடுத்த ஒருமணி நேரத்தில் இந்தியா முழுவதும் இந்த செய்தி பரவியது. மக்கள் மனதிலும் இந்த கூட்டணியின் பெயர் எளிதில் பதிந்து விட்டது. இந்தியா முழுவதும் நேற்று இரவு இந்தியா என்ற கூட்டணி பெயர் வைலலானது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தான் நேற்று மாலை டில்லியில் உள்ள ஒரு ஓட்டலில் பாஜக தலைமையில் என்டிஏ கூட்டம் கூட்டப்பட்டது. பிரதமர் மோடி தான் தஙு்கள் பலம் என கடந்த 9 ஆண்டுகளாக கூறி வந்தவர்கள், தேர்தல் நெருங்கும் நிலையில் நாடு முழுவதும் தேடி 38 கட்சிகளை அழைத்து வந்து உள்ளனர். இதில் அதிமுக, பாமக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தொண்டர்கள் இல்லாத கட்சி. கட்சிக்கு தலைவர்கள் மட்டுமே இருக்கும் கட்சிகள்.
ஏற்கனவே பல துண்டுகளாக உடைந்த கட்சிகளை பொறுக்கி எடுத்து டில்லி கூட்டத்துக்கு கொண்டு வந்து உள்ளனர். இந்தியா என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்ததன் விளைவாக என்டிஏவுக்கு(தேசிய ஜனநாயக கூட்டணி) மோடி புது விளக்கம் அளித்தார்.
அதில், (என்) N – புதிய இந்தியா (New India), (டி) D – வளர்ந்த நாடு (Developed Nation), (ஏ) A – மக்களின் ஆசை (Aspiration of People) என விளக்கம் அளித்தார். மேலும், தங்கள் கூட்டணியில் 38 கட்சிகள் உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வலிமையடைத்து வரும் நிலையில் இந்தியா என்ற பெயரும் பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் அளித்து விட்டது.
தமிழகத்தில் உள்ள பாஜக ஆதரவு டிவிக்கள் நேற்று நடத்திய டிபேட்களில் கூட இந்தியா என்ற பெயரை INDIA என போடாமல் I.N.D.I.A. என்றும், அதே நேரத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெயரை NDA என்றும் வெளிப்படுத்தின. இந்தியா என்ற பெயர் பாஜக ஆதரவு ஊடகங்களுக்கே இந்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்றால் பாஜகவின் நிலைமை என்ன என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.
எனவே இந்தியா என்ற பெயருக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலையில் பாஜகவினர் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பை, அதற்கடுத்து சென்னை, கொல்கத்தா என்று இன்னும் 3 கூட்டங்களுக்கு இடம் தேர்வு செய்து விட்டனர்.
அடுத்தடுத்த இந்தியா கூட்ட நடவடிக்கைகளால் பாஜக இன்னும் பின்னடைவை சந்திக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.