சென்னையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை தொடர்கிறது.
செல்ஃபோன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் பூர்விகா, கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் 400க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் யுவராஜ் நடராஜன். பூர்விகா நிறுவனத்தின் பிரதான கிளை சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை நிறுவனம் மூலம் செல்போன், டேப்லெட்கள் மற்றும் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தில் நேற்று காலை 7 மணி முதல் 10க்கும் மேற்பட்ட வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடையில் ஏற்கனவே பணியில் இருந்த ஊழியர்களை தவிர்த்து புதிதாக வெளியிலிருந்து வரும் ஊழியர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், பூர்விகா உரிமையாள யுவராஜ் நடராஜனின் வீடு, சென்னை பள்ளிக்கரணையில் இந்த நிறுவனம் தொடர்புடைய மற்றொரு இடத்திலும் என 3 இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. சென்னையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.