தேசிய இளைஞர் திருவிழா வரும் ஜனவரி மாதம் டில்லியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் குழு கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். அதன் முன்னேற்பாடாக திருச்சிராப்பள்ளி பாரதி தாசன் பல்கலைக்கழகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட அளவிலான மாணவர்கள் குழுவிவை தேர்வு செய்யும் நிகழ்ச்சி தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் நடைபெற்றது.
மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா, துணை முதல்வர் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணி திட்ட குழும இயக்குநர் செந்தில்குமார், பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் லக்குமி பிரபா ஆகியோர் மாணவர்களை தேர்வு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலரும், தஞ்சாவூர் மாவட்ட தேசிய இளைஞர் திருவிழாவிற்கான சிறப்பு அலுவலருமான சந்தோஷ்குமார் அனை வரையும் வரவேற்றார்.
தமிழ்த்துறை தலைவர் வெற்றிவேல் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் கண்ணன் செய்திருந்தார்.