அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் அரசு அலுவலர்களால் ஏற்கப்பட்டது.
இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி வாசிக்க அதனைத்தொடர்ந்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் பின் தொடாந்து கூறி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.