Skip to content

தேசிய பெண் குழந்தைகள் தினம்… அரியலூர் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

அதன்படி அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரிக்கவும், ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்திற்கு நிகராக உயர்ந்திடவும், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் செயல்படுத்தப்படுவதை நான் அறிவேன். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் செயல்பாட்டிற்கும், நடவடிக்கைகளுக்கும் நான் உறுதுணை புரிவேன்.

கருவில் வளரும் சிசுவின் பாலினத்தை எக்காரணம் கொண்டும் கண்டறியவோ, கருக்கொலை செய்யவோ முயலமாட்டேன். நானும் எனது உறவினர்களும் எனது கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறப்பிற்கும் அவர்களின் பாதுகாப்பிற்கும் எவ்வித பாகுபாடின்றி சமமான மதிப்பு அளித்து உதவி செய்வோம். மேலும், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்து உயர்கல்வி தொடர்வதை உறுதி செய்வோம். குழந்தை திருமணத்தை நடத்தவோ

ஆதரிக்கவோ மாட்டோம். பெண் குழந்தைகளுக்கு எதிரான எந்தவித குற்றங்கள் குறித்த தகவல்களையும் உரிய அலுவலர்களிடமோ, 1098/181 இலவச தொலைபேசி உதவி எண்கள் மூலமாகவோ கட்டாயம் தெரிவிப்பேன். பெண் குழந்தைகளின் பெருமையை போற்றி எதிர்காலத்தில் பெண்குலம் தழைக்க செய்வோம் என்றும், உளமார உறுதி அளிக்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் கையெழுத்து பிரச்சாரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூ நடராஜமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.