இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள அல் – ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிக் பள்ளியில் 90 ஆயிரம் பேப்பர் கோப்பைகளை கொண்டு பிரம்மாண்டமான தேசிய கொடி அமைக்கும் உலக சாதனை நிகழ்ச்சி வரும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து பள்ளியின் தாளாளர் முகம்மது ஆரிப் கூறியதாவது:
நாட்டின் 75 வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் விதமாகவும், மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் தனி திறமைகளை நிரூபிக்கும் விதமாகவும் மற்றும் பள்ளியின் 30 ம் ஆண்டு விழாவை முன்னிட்டும் 90 ஆயிரம் பேப்பர் கோப்பைகளை கொண்டு பிரமாண்டமான தேசிய கொடியை அமைத்து உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற உள்ளது.
பள்ளியில் பயிலும் 340 மாணவ மாணவிகள், 22 ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இதர பள்ளி மாணவர்கள் பங்களிப்புடன் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சியை எலைட் வேர்ல்டு ரெகார்ட் மற்றும் இந்தியா ரெகார்ட்ஸ் அகாடமி ஆகிய இரண்டு உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வாளர்கள் நேரில் கலந்து கொண்டு ஆய்வு செய்து சான்றளிக்க உள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.